சிறுகதை

தாவர சங்கமங்கள்

ரெ.கார்த்திகேசு 

சிற்பம்: ஜானகிராம்

ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்தப் பகுதியைச் சரியாகக்கூடக் கவனித்ததில்லை. பினாங்குத் தீவிலிருந்து தலைநிலத்துக்குப் போகும்போது கடல் பாலத்தைப் பயன்படுத்த வேண்டி இருந்தால் காரில் இந்த விரைவுச் சாலையைக் கடக்கும்போது இடது பக்கமாகப் பார்த்தால் இந்த கான்க்ரீட் நடைபாட்டை தெரியும். அதுவும் விரைவான ஓட்டத்தில் கருத்துச் செலுத்திப் பார்க்க முடியாது.

நடை மிகத் தேவை. இனிப்பு நீர் இருந்தது. இரத்த அழுத்தம் இருந்தது. நாற்பது வயதிலேயே எல்லாம் ஆரம்பம். ஆனால் எலும்பில் ஈரம் வற்றாமல் இருந்தவரை பேட்மிண்டன் ஆட முடிந்தது. பல்கலைக் கழக வளாகத்துக்குளேயே மாலையில் மெதுவோட்டம் ஓட முடிந்தது. ஆனால் ஐம்பத்தியெட்டு வயதில் முட்டிகளில் ஈரம் வற்றிய நிலையில் அது முடியவில்லை. எங்கே நிம்மதியாக நடக்கப் போகலாம் என்று தேடியபோதுதான் இந்த இடம்.

பினாங்கின் கடலோர விரைவுச்சாலை இன்னமும் கட்டி முடிக்கப் படவில்லை. அந்தப் பிரம்மாண்டமான பணி நில ஆர்ஜிதம் செய்யும் பிரச்சினைகளால் ஆண்டுக் கணக்காகத் தாமதப்பட்டுக் கிடக்கிறது.

ஆனால் கடல் பாலத்தைத் தீவோடு இணைக்கும் இந்தப் பகுதி மட்டும் முடிந்திருந்தது. அந்தப் பகுதியை ஒட்டி இந்த நடைபாட்டை அமைக்கப்பட்டிருந்தது. தீவின் கிழக்கே உடினி சாலையில் அமைந்திருந்த மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து கடலை ஒட்டிப் புறப்படும். இங்கேயே காரை நிறுத்தி வைத்துவிட்டு நடக்க ஆரம்பிக்கலாம்.

பாட்டை பினாங்குப் பாலம் ஆரம்பிக்கும் திசையில் வடக்கு தெற்காக ஓடும். கடல் மீது போடப்பட்ட பாலங்களில் ஆசியாவிலேயே மிக நீளமான பாலங்களில் ஒன்றான பினாங்கு பாலத்தையும் அதன் கம்பீரமான மினாரெட் வடிவில் அமைந்த உயர்ந்த மத்திய பாகத்தையும் பார்க்கலாம். கண்ணை இன்னும் தூர ஓட்டினால் அக்கரையில் பட்டர்வர்த் துறைமுகமும் கண்டெய்னர்கள் தூக்கும் இராட்சசக் கொக்குகள் போன்ற பாரம் தூக்கிகளும் தெரியும். தலையைத் திருப்பிப் பின்னால் பார்த்தால் வீங்கிய விரல்போல் ஓங்கி நிற்கும் கொம்தார் கட்டிடமும் ஃபெர்ரி அணையும் துறையும் தெரியும்.

ஒரு அறுபது வயதில் "எல்லாம் பார்த்து அனுபவித்தவர்" என்று அடுத்தவர்கள் சொல்லும் முதிர்ச்சியில் கூட இந்த நடையும் இந்த நடைபாட்டைக் காட்சிகளும் கிழவனுக்கான போதி மரங்கள் ஆகின்றன. புதியதாக இவற்றைப் பார்க்க முடிகிறது. புதியதாக எவ்வளவோ கற்றுக் கொள்ள முடிகிறது. நியூரோன்கள் மடிந்து வரும் மூளைப் பிரதேசங்களில் புதிய வேர்கள் முளைக்கச் செய்ய முடிகிறது.

இந்தப் பழைய ஜெட்டியை எடுத்துக் கொள்வோமே! புதிய ஜெட்டிக்குப் பக்கத்திலேயே உடைந்து சிதிலமாகிக் கிடக்கிறது. அதன் பக்கத்தில் முற்றாக ஓட்டையாகிப்போன சில படகுகள் இன்னமும் வண்டலில் எலும்புக் கூடுகளாகக் கிடக்கின்றன. மணிரத்தினத்தின் படத்தில் அந்தப் பொடிசும் அந்த இளசும் "தில் தில்" என்று பாடக் கேமரா அலையுமே, அதை ஒவ்வொரு முறையும் ஞாபகப்படுத்துகின்றன.

எந்த மீனவன் விட்டுப் போன படகு? எத்தனை கடல் தூரம் கண்ட படகு? யாரார் ஆசையாக வர்ணம் பூசிப் பெயர் எழுதி வைத்து அனுபவித்த படகு? மீன்கள் ஏராளமாகக் கிடைத்தபோது சிரித்திருந்தவர்களும், கிடைக்காதபோது அழுதிருந்தவர்களும் இப்போது எங்கே? ஆழக் கடலில் அமைதி உறக்கம் கொள்ளாமல் இங்கே வண்டலில் கைவிடப்பட்டுத் துருப்பிடித்து மக்கிச் சாவ என்ன விதி? இப்போது அதற்கு என்ன மதிப்பு?

ஓய்வு பெற்ற பிறகு மனிதனுக்கு உள்ள மதிப்புத்தான்!

அந்தப் பாட்டை தொடர்ந்து பினாங்கு பாலத்தைத் தூக்கி நிற்கும் பிரம்மாண்டமான தூண்களுக்குள் புகும். தலைக்கு மேலே தீவிலிருந்து தலை நிலத்துக்குப் போகும் எல்லா வாகனங்களும் இங்குதான் அதன் மூன்று கிளைச் சாலைகள் வழியாக பாலத்தின் மேல் ஏறும்; இன்னொரு பக்கம் இறங்கும். கீழே நடந்தவாறு அவற்றின் இயந்திரங்கள் உறுமுவதையும் சக்கரங்கள் தேய்வதையும் கேட்கலாம்.

அந்தப் பாலத்தின் கீழே நின்று கொண்டு செஞ்சாந்து பூசி எழும் உதய சூரியனைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் "என்ன இது, என்ன இது" என மனம் பதைபதைக்கும். எப்படி இது சாத்தியம்? எந்தக் கலைக்குள் இந்த அழகு அடக்கப்படும்? யார் செய்யும் வித்தை?

நாத்திகனுக்குக் கூட ஒரு வேளை கடவுள்இருக்கக் கூடுமோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கும் வேளைதான்.

வைகறையில் காமெராவோடும் அதன் முக்காலியோடும் சிலர் வந்து சூரிய உதயத்தைப் படம் பிடிக்கக் காத்திருப்பார்கள். வெப்ப மண்டல சூரிய உதயத்தை முன்னறிந்து சொல்ல முடியாது. ஒரு நாள் ரத்தச்சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் என வண்ண வண்ண மேகக் கோலம் போட்டு ஒய்யாரமாக எழும். ஒரு நாள் வெள்ளையாகப் பளீரென்று இன்று உலகத்தை வறுத்தெடுக்கப் போகிறேன் என்ற ரௌத்திரத்துடன் எழும். இன்னொரு நாள் கரிய மேகங்களைப் போர்த்திக் கொண்டு தலையையே காட்டாது. காமெராவோடு வந்தவனின் ஜாதகத்தைப் பொருத்தது.

நடக்கும்போது இவர்களோடு பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் தனிமையையும் கெடுக்க விரும்புவதில்லை. என் தனிமையையும் கெடுத்துக் கொள்ள விரும்புவதில்லை.

ஆனால் இந்த ஆறு மாதத்தில் விடாமல் நடந்து சந்தித்துக் கொள்ளும்போது "சிலாமாட் பகி" (காலை வணக்கம்) மட்டும் சொல்லிச் செல்லும் ஒர் இரண்டு மூன்று பேரை இப்படியே தொடர்ந்து அந்நியர்களாக வைத்துக் கொண்டிருப்பது நல்லது என்று தோன்றவில்லை.

ஆனால் அதற்காக ஓடிப்போய் வாழ்க்கை வரலாற்றைக் கேட்பதிலும் ஆர்வமில்லை. இருவரும் மலாய்க்காரர்கள். இந்த நாட்டில் குடிமகனாக மூன்று தலைமுறைகள் வாழ்ந்திருந்தும் எல்லாருக்கும் மலாய் மொழி சரளமாகப் பேசத் தெரிந்திருந்தும் இனங்களுக்கிடையான தொடர்பில் ஒரு தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவன் மலாய்க்காரன்; நான் தமிழன் என்று. என்ன இழவு மனத்தடையோ தெரியவில்லை.

நாளுக்கொரு வாக்கியமாக உறவை வளர்க்க வேண்டியிருந்தது.

ஒரு நாள்: "இன்றைக்குக் காற்று நன்றாக இருக்கிறது".

ஆமாம்" என்று நடந்தவாறு சொல்லிப் போனவரிடம் நாளை பேச்சை வளர்த்த வேண்டியதில்லை என்று முடிவானது. பேச விருப்பமில்லாத மனிதரிடம் என்ன பேச்சு!

மறுநாள் மற்றவரிடம்: "பார்த்தால் இன்றைக்குச் சரியான வெயிலாக இருக்கும் போலிருக்கிறது!"

நின்று விட்டார்: ஆமாம். பாருங்கள் காற்றே இல்லை. இந்த ஒரு வாரம் அப்படித்தான் இருக்கிறது. மழை வரும் அடையாளமே காணோம்" என்றார். சினேகமானவர்.

ஆமாம். நண்பகலானால் வறுத்து எடுக்கிறது!"

"சொல்ல முடியாது. நாளைக்கு ஒருவேளை குளிராகிக் காற்று வீசலாம்! நாளைக்குப் பார்ப்போம்!" என்று நடந்தார்.

நாளை உண்மையிலேயே மேக மூட்டமாக இருந்தது. காற்றும் வீசியது. சந்தித்த வேளையில் அவராக நின்றார்: "நேற்று என்ன சொன்னேன், பாருங்கள்! நேற்று கடுமையான வெயில். இன்றைக்கு மழை வரும்" என்றார்.

"சரியாகச் சொன்னீர்கள்! அதுதான் வெப்ப மண்டல நாடுகளின் தட்பவெப்பம்!"

"பக்கத்தில்தான் இருக்கிறீர்களா?" என்று ஆவலுடன் கேட்டார்.

"ஆமாம். மின்டன் ஹைட்ஸ்! நீங்கள்?"

தகவல்கள் வேகமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தன் பெயர் ஹஷிம் என்று சொன்னார். தான் அரச மலேசியப் போலிசில் வேலை பார்த்து ஓய்வு பெற்றதாகச் சொன்னார். இளவயதில் வலைப் பந்து விளையாடி இருவர் மோதிக் கொண்டு விழுந்ததில் முட்டியில் அடிபட்ட கதை சொன்னார். இளவயதில் கவனிக்காமல் விட்டதனால் இப்போது ரொம்ப பலவீனமாகி மாடிப்படி கூட ஏற முடியாமல் இருப்பதாகச் சொன்னார். இப்படிச் சமதரையில் மெதுவாக நடப்பது ஒன்றுதான் செய்ய முடிந்தது. உடம்பு வைத்துவிட்டது. கொலஸ்ட்ரால் அதிகமாகிவிட்டது என மருத்துவர் சொல்லியிருக்கிறார். இப்போது மாட்டிறைச்சி சாப்பிடுவதை விட்டுவிட்டார். மாலை, இரவில் முட்டியில் கடுமையான வலி. மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மகன்கள் மூன்று பேர். நல்ல நிலையில் இருக்கிறார்கள். வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கிறார்கள். மாதாமாதம் பணம் அனுப்புகிறார்கள். மனைவியும் நோயாளி. காலம் ஓடுகிறது.

அப்புறம் பார்க்கும் போதெல்லாம் நின்று முப்பது விநாடிகள் முதல் இரண்டு நிமிடம் வரை பேசி ஓரிரு குடும்பச் செய்திகள் பரிமாறிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. நேற்று மகன் தன் பிள்ளையுடன் வந்திருக்கிறான். பேரன் ரொம்பச் சுட்டி. இரண்டே வயதில் திருக்குரான் ஆயத்துகள் சொல்லுகிறான். மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார். இப்போ தேவலை.

கொண்ட அளவுக்கு நிகராக நானும் என் வாழ்க்கைத் தகவல்களை அளந்துதான் கொடுத்தேன்.

பேசாமல் போன மற்றவர் ஒரு நாள் தானே "இன்றைக்கு பருவநிலை நன்றாக இருக்கிறது" என்று சொல்லிப் போனார். அடுத்தநாள் ஹஷிமோடு பேசிக்கொண்டு நின்ற வேளையில் வந்து பேசக் கலந்து கொண்டார். டாவுட் என்ற அவருக்கும் ஹஷிமுக்கும் ஏற்கனவே அறிமுகமிருந்தது. டாவுட் மீன்பிடித்துறையில் வேலை பார்த்தவர். 65 வயது ஆகி விட்டது. நான்கு பிள்ளைகள். ஒரு பிள்ளை மனவளர்ச்சி குன்றியவன். 40 வயதில் அவரோடு வீட்டிலேயே இருக்கிறான். இரண்டு பெண்கள் திருமணமாகிப் போய்விட்டார்கள். மகன் ஒருவன் கல்யாணமே வேண்டாம் என்று பிரமச்சாரியாக இருக்கிறான். வங்கி மானேஜர்.

அப்புறம் மூவரும் நின்று ஓரிரு நிமிடம் பேசுவதுண்டு. பேசப்பேச அவர்கள் வாழ்வு என்னும் படத்தைத் துண்டு துண்டாக மனதில் சேர்த்து உருவாக்க முடிந்தது. முழுதாக இல்லாவிட்டாலும் படம் உருவாகிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் டாவுட் அந்தப் பாதசாரிகள் பாலத்தில் மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து வந்தார்.

"ஏன் இன்றைக்கு உட்கார்ந்து விட்டீர்கள் டாவுட்? உடல் நலம் இல்லையா?"

"உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். நேற்று இரவு ஹஷிம் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இன்றைக்கு அடக்கம். நேற்று இரவு முழுக்க அவர் வீட்டில்தான் இருந்தேன். இப்போதும் அங்கேதான் போகப் போகிறேன். வரட்டுமா?" முகவரியைக் கூறிவிட்டு அவசரமாகச் சென்று விட்டார்.

என்ன செய்வதென்று யோசித்துக் கொஞ்ச நேரம் நின்றுவிட்டேன். ஏன் என்னிடம் இவ்வளவு அக்கறையாகச் சொல்ல வேண்டும்? நான் என்ன உறவா? இரண்டு மாதங்களுக்கு முன் தெரிந்து கொண்ட அறிமுகம்தான். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போனதில்லை. குடும்பத்தில் ஒருவரையும் முகம் பார்த்ததில்லை. இருந்தும் எனக்காகக் காத்திருந்து சொல்ல வேண்டுமென்று தோன்றியிருக்கிறது. இப்படி அக்கறையாகப் பேசும் மனிதரை முதலில் சினேகமில்லாத மனிதர் என எப்படி நினைத்தேன்? அணுகினால்தான் தெரிந்துகொள்ளலாம் போலும்.

காரை எடுத்துக் கொண்டு நேராக ஹஷிம் வீட்டுக்குச் சென்றேன். வீட்டின் முன் பிளாஸ்டிக் கூடாரம் போட்டிருந்தார்கள். கைலியும் மலாய் பாஜுவும் (சட்டை) போட்ட மலாய்க்காரர்கள் ஆங்காங்கே உட்கார்ந்திருந்தார்கள். நான் டிராக் சூட்டும் டீ ஷர்ட்டுமாகப் போயிருந்தேன்.

வாசலில் இருந்து ஒரு பெரிய மனிதர் கைகொடுத்து வரவேற்று உள்ளே அழைத்துப் போனார். யாரோ தெரியவில்லை. என்னை யாரென்றும் கேட்கவில்லை. ஹ"஢மின் உடலுக்கு வெள்ளைத் துணி போர்த்தியிருந்தார்கள். முகம் பார்க்கவும் முடியவில்லை.

காலடியில் நின்றவாறு கைகள் கூப்பி மனதுக்குள் சிவபுராணம் சில வரிகள் சொன்னேன்:

"செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்..."

மேலிருந்து இவர்களை வாங்கிக் கொள்கிற இறைவன் அல்லாவாக இருந்தாலும் சிவனாக இருந்தாலும் அவரை இதமாக வாங்கி அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டினேன். வணங்கி வெளியே வந்தேன். அனைவரும் அறியாத முகங்கள். டாவுட்டை எங்கும் காணவில்லை. பரவாயில்லை. நாளைக்கு அவரைப் பாலத்தடியில் பார்த்துப் பேசிக் கொள்ளலாம். வரவேற்ற அதே பெரிய மனிதரிடம் விடை பெற்றுக் காரை எடுத்துக் கிளம்பினேன். ஒரு நண்பரை இழந்த இலேசான வெறுமை மனதில் இருந்தது.

நான் கொல்லைப் புற வழியாக உள்ளே நுழைந்து குளியலறைக்குப் போவதை மனைவி வியப்பாகப் பார்த்து "ஏன் இன்னைக்கு பின் வாசல் வழியா வர்ரீங்க?" என்று கேட்டார்.

"ஒரு சாவுக்குப் போயிட்டு வந்தேன்! அதான்!"

"இதென்ன? விடிய காலையில நடக்கப் போனவங்க திடீர்னு சாவுன்னு சொல்றிங்க? யாரு? நமக்கு சும்மா தெரிஞ்சவங்களா? உறவா?"

"ஒரு மலாய்க்காரர்!"

"மலாய்க்காரரா? யாரு?"

"இரு! குளிச்சிட்டு வந்து சொல்றேன்!"

குளிக்கும்போது அவர் சும்மா தெரிந்தவரா உறவா என்ற சந்தேகம் எழுந்தது.

 ¿ýÈ¢: ¾¢¨º¸û þ¨½Â Á¡¾ þ¾ú (www.thisaigal.com)